வேதம் ஓர் அறிவு களஞ்சியம். ரிஷிகள் மூலமாக இறைவனாலேயே வெளியிடப்பட்டதே வேதம் என்று மரபில் வந்தோர் வேதத்தை நோக்குகின்றனர். நாம் வாழ்வில் எவற்றையெல்லாம் அடையலாம் என்ற நம் இலக்குககளைப்பற்றிய அறிவைக் கொடுத்தும் அந்த இலக்குககளை அடைவதற்கான பாதைகளின் அறிவை கொடுத்தும் நம் வாழ்வை வேதமானது பயனுடையதாக்குகிறது.
வேதத்தின் கடைசி பகுதியானது, வேதாந்தம், ஞானகாண்டம், உபநிஷத் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மெய்ப்பொருளைப் பற்றிய அறிவை மையமாக கொண்டதால் ஞானகாண்டம் எனவும் பிறவித் தளையை நீக்கும் மெய்ப்பொருளைப் பற்றிய ஞானம் என்னும் பொருளைக் கொண்டதால் உபநிஷத் எனவும் பெயர் பெற்றுள்ளது.
மகாகவி பாரதியார் 'பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே பார்மிசை ஏதொரு நூலிது போலே' என்று கூறுகிறார்.
உபநிஷத் என்னும் சொல்லில் உப நி ஷத் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கீழ்கண்டவாறு பொருள் கொள்ளப்படுகிறது.
உப - குருவின் அருகில் சமீபத்தில்
நி - உறுதியாக நிச்சயமாக
ஷத் - அழிப்பது துயரத்தை நீக்குவது
ஆக உபநிஷத் என்னும் சொல்லின் மொத்தப் பொருள், ஆசாரியன் அருகில் இருந்து உறுதியாக மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தை அதாவது தன்னுடைய அறிவைப் பெற்று அதன் மூலம் அறியாமை நீங்குவதால் துயரத்தை நீக்குத்தல் என்பதே.
அப்படிப்பட்ட மெய்யறிவைத் தரும் நூலையும் உபநிஷத் என்று அழைக்கிறோம்.
எல்லா உயிரினங்களும் துயரத்தை நீக்குதலை லட்சியமாகக் கொண்டுள்ளது. இதையே மோட்சம் என்றும் வீடு என்றும் மனிதனுடைய தேடுதல்களிலே முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்காக ஒருவருடைய உண்மையான தன்மையையே நான் யார்? என்ற கேள்விக்கு விடையாகவே உபநிஷத் எடுத்து விளக்குகிறது. எப்பொழுதுமே பந்தபடாத தன் உண்மையான மெய்பொருளை அதாவது ஆத்ம ஸ்வரூபத்தை அறிவதன் மூலமே மோட்சம் அடைய முடியுமென்பதே உபநிஷதுக்களின் ஒட்டு மொத்த கருத்து. இந்த ஆத்மஞானம், அதன் பலன், அதை அறிய வேண்டிய சாதனைகள் பற்றியே உபநிஷத்துக்கள் அறிவுறுத்துகின்றன.
எல்லா உபநிஷத்துக்களும் ப்ரம்மம் ஒன்றே உண்மை. அந்த ப்ரம்மம் ஆத்மா என்று ஒருமுகமாக உணர்த்துவதால், அந்த மெய்யறிவு ஒன்றே திரும்ப திரும்ப வலியுறுத்துகிறது.
பரமாத்மா என்ற மெய்யறிவின் லட்சணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, மனதினாலும் சிந்திக்க முடியாது என்று தைத்தரீய உபநிஷத் கூறுகிறது. பொதுவாக உலகத்திலுள்ள பொருட்களைக் கண்களால் பார்த்தோ, காதுகளால் கேட்டோ, மூக்கால் நுகர்ந்தோ, நாவினால் சுவைத்தோ, தோலினால் தொட்டு உணர்ந்தோ தான் அனுபவிக்கிறோம். நமக்கு வேறாக உள்ளதையே புலன்களால் உணர முடியும். புலன்கள் அனுபவித்ததைத் தான் மனத்தினால் சிந்திக்க முடியும். ஆனால் பிரம்மன் நானே என்னும் போது அதை எனக்கு அந்நியமான பொருளாகக் கருத முடியாது.
|