யார் தன்னை கானம் செய்கிறர்களோ ஜெபிக்கிறார்களோ அவர்களையும், அவர்கள் மூலமாக உலகத்தையும் காப்பாற்றும் காயத்ரீ மந்திரம். காயத்ரிக்கு மேல் மந்திரமோ, தந்திரமோ, தெய்வமோ கிடையாது. அவ்வளவு உயர்ந்த மந்திரம், தெய்வம் காயத்ரி... நமக்கு கிடைத்தற்கரிய மாபெரும் சக்தி காயத்ரீ. இகத்திற்கும், பரத்திற்கும் நன்மையைக் காட்டும் மேலான மந்திரம். இந்த மந்திரம் இந்த தேவதைகள் இது சம்பந்தப்பட்ட ரிஷிகள் இவர்கள் பற்றி அறிந்து இதைப் பயன்படுத்தினால்தான் பிரும்மஸ்வரூபத்தை அறிய முடியும். காயத்ரீ என்பது ஜோதி வழிபாடு அல்லது சூரிய வழிபாடோ ஏதோ ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் ஏகபோக உரிமை அல்ல. எல்லோரும் அவரவர்களுக்கு ஏற்பட்ட முறைபடி காயத்திரியை வழிபட்டு பயனடைய முடியும்.
காயத்ரி தோன்றிய விதம்:
எங்கும் எதிலும் வியாபித்துள்ள ஒரு சக்தி இருக்கிறது. அது ஆண் அல்ல, பெண் அல்ல, ஆவி அல்ல, நாம ரூபம் இல்லாதது. ஆனால் உலகம் உய்ய அந்த சக்தியே உருவமும் ஏற்றது. அந்த சக்தியே குரு, அம்மை, அப்பன். உலகத்தை தோற்றி வைப்பதும் சக்தியே. பரிபாலிப்பதும் சக்தியே. தன்னிடம் ஐக்யப்படுத்திக் கொள்வதும் சக்தியே. இம்மூன்று தொழில் புரியும்போது மும்மூர்த்தி. ஓய்ந்திருக்கும்போது பரபிரும்மம். இந்த பிரும்ம சக்தியே சத்சித் ஆனந்த ரூபம். இதன் தத்துவத்தை விளக்க நான்கு வேதங்கள் ஆறு சாஸ்திரங்கள் தோன்றின. இந்த சாஸ்திரம் மாபெரும் கடல். பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. இந்த வேதக்கடலை ரிஷிகள், ஞானிகள் கடைந்தனர். த்ரயீ என்று ரிக், யஜுர், சாமவேதங்களின் சாரம் கிடைத்தது. இதன் சாரத்தைக் காண மதி என்னும் மத்தைக் கொண்டு கடைந்தனர். அதிலிருந்து மூன்று பாத வடிவமான காயத்ரீ தோன்றிற்று. அதிலும் சாரம் காணக் கடைந்தனர். பூ:பூவ:ஸுவ: என்று மூன்று வ்யாக்ருதிகள் உதித்தன. அதிலும் சாரம் காண முயற்சித்ததில் 'ஓம்' என்ற ப்ரணவம் கிடைத்தது. அ, உ, ம, என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையான இதுவே நாதம். நாதாந்தம் எனப்படும். உலகமெல்லாம் ப்ரணவத்திலேயே சென்று படிபடியாக ஒடுங்கும். உலகம் தோன்றும்போது ஓங்காரம் மலரும். அதிலிருந்து வியாக்ருதி உதிக்கும். அதிலிருந்து காயத்ரீ தோன்றும். அதிலிருந்து வேதங்கள் தோன்றும். அதிலிருந்து உலகம் உண்டாகும்.
பிண்டமான நம் உடலிலும் அந்த சக்தி திருவிளையாடல் புரிகிறது. நமது புத்தியிலிருந்து எண்ணற்ற எண்ணங்கள் அலை அலையாக கிளம்புகின்றன. செயல்கள் கிளம்புகின்றன. அந்த சக்தியே சாவித்ரீ, காயத்ரீ, சரஸ்வதி - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி - துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி.
கா+ய+ஆ+த்ரீ
கா என்பது ஜல தத்துவம்.
அதாவது ஜலத் தத்துவமாகிய ஸ்தூலதேகம்.
ய என்பது வாயு தத்துவம். அதாவது வாயு தத்துவமாகிய ஸூஷ்ம தேகம்.
ஆ என்பது அக்னி தத்துவம். அதாவது அக்னி தத்துவமாகிய காரணதேகம் (திரி-மூன்று).
ஜலதத்துவமாகிய ஸ்தூல உடம்புக்கு அதிகாரி ப்ரம்மா, வாயு, தத்துவ ஸூஷ்ம உடம்புக்கு அதிகாரி விஷ்ணு. அக்னி தத்துவமான காரண உடம்புக்கு அதிகாரி ருத்திரன்.
புறத்தில் கண் கொண்டு அனுபவிப்பது ஸ்தூலம். மனத்தினால் மனக்கண் கொண்டு அனுபவிப்பது ஸூஷ்மம். அகத்தில் ஞானக்கண் கொண்டு அனுபவிப்பது காரணம்.
திரதேகஸ்வரூபமே காயத்ரீ மந்திரத்தின் நோக்கம். இந்த மூன்று தேகங்களின் சொரூப சுபாவங்களை ஜயம், திரிபு, மயக்கமின்றி தெரிந்து அனுபவிப்பதே காயத்ரீ மந்திரத்தின் பயன் அடைந்த நிலை.
"ஓ தயாத்" என்று காயாத்ரீ முடிகிறது. ஓ - என்பது ஆத்ம அறிவு.
த - சத்வ குணமான ஜீவகாருண்யம்
யா - என்றால் தெய்வ அம்சம்
த் - என்பது அருள் அனுபவம்
முதலில் ஜீவ காருண்ய ஸித்தி, பின் அருள் அனுபவ ஸித்தி, கடைசியில் இறையனுபவ ஸித்தி.
காயத்ரீ வேதங்களால் ஆக்ரயிக்கப்பட்ட அன்னையாவாள். அன்போடு ஜபம் செய்பவனை விடாது பாதுகாப்பது எதுவோ அதனைத்தான் காயத்ரீ என்றழைத்தனர்.
நம் தேசீய மந்திரம்:
காயத்ரீ எல்லோரும் உய்வதற்காக ஏற்பட்ட மகா மந்திரம் - தேசீய மந்திரம். இம்மனிதப் பிறவிக்கே லட்சியமாக வேதத்தின் சாரமாக இருப்பது இம் மந்திரம். இப்பேற்பட்ட மகிமை வாய்ந்த மந்திரம் எல்லோருக்கும் உரிய பொது சொத்து. இதை இன்னார்தான் ஜபிக்கலாம், இன்னார் ஜபிக்கக்கூடாது என்பதில்லை.
காயத்ரீ மந்திர தத்துவம் யாருக்கு விளங்குகிறதோ அவர்கள் உபாஸிக்கலாம்.
காயத்ரீ மந்திரம்: ஓம் பூர் புவ: ஸூவ: தத்ஸ விதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோன ப்ரசோதயாத்!!
யார் நம் அறிவை தூண்டுகிறாரோ அந்தச் சுடர் கடவுளின் மேலான ஒளியை த்யானிப்போமாக.
இது தான் அம்மகா மந்திரத்தின் அர்த்தம். பாரத நாட்டின் ஆத்மீக விழிப்புக்காக ஏற்பட்ட இம் மந்திரத்தை ஒரே மூச்சில் உச்சரித்துவிடலாம்.
காயந்தம்+த்ராயதே= காயத்ரீ ஜபிப்பவனை ரக்ஷிப்பது என்று பொருள்.
இதிலுள்ள 24 எழுத்துக்களும் எல்லா தேவதைகளையும் கட்டி நிற்பதால் அவர்களின் அருளை பெறுவதற்கும் ஏற்றதாக இருக்கிறது.
24 அக்ஷரங்களுடைய சந்தஸ் விசேஷத்திற்கு காயத்ரீ என்று பெயர். அது பரமாத்மா ஸ்வரூபம்.
அஸ்வினி சாஸ்த்ரி
ரோகிணி சாஸ்த்ரி
|